வியாழன், 3 ஜூன், 2010

யூத்புல் விகடனின் காதலர் தின ஸ்பெஷலில் வந்த படைப்பு

"என்னிலும் சிறந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை மறப்பாய்"... "என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை நினைப்பாய்"... காதலையும், வாழ்க்கையையும், மனித உள்ளங்களையும், அதன் தேடுதலையும், ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது.ஆனால் வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்... காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும் இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பட்டது. காதல் என்பது இவ்வளவு தானா என்ன. காதல் எவ்வளவு உயர்வானது. மனைவிக்காக காதலை மறக்க முடியுமா? கவிதையா இது... பிதற்றல் என்றே தோன்றியது. ஆனால் அதே தான் இன்று எனக்கும் கவிதையாக வந்துள்ளது. இப்படி "உன்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- உன்னை மறக்கக்கூடும்... உன்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- உன்னை நினைக்கக் கூடும்". உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா...காதல் மட்டும். மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை... உற்று நோக்கின் காதல் கூட அப்படித்தான் என்று கருதுகிறேன்.
காதலும், காதலியும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளன. மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. என் காதலியாய் உன்னை பார்த்த போது இருந்த முகம்+மனம்... இப்போது வேறு ஒருவரின் மனைவியாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக... நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று நீயும் சொன்னாய்... நானும் சொன்னேன்... ஆனால் பாரேன். அது நடந்ததா, இல்லையே... ஆனாலும் வாழ்கிறோம். பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்கள். அப்படி தான் இருக்க வேண்டும். நீ போன பின்னால் எல்லாமே என்னை விட்டு போய் விடவில்லை. அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறேன். இடை இடையே உன் ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடம் பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது. இன்று "நீயில்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி இருப்பதாக" தோன்றுகிறது. அப்படியெனில் காதல்... காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா... வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா... அதுவா... வேறு எதுவா...இப்படி தான் எதையாவது நினைத்து எனக்கு வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்துகிறேன் இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ அடி விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன. "எழுதுங்கள் இவன் கல்லறையில்- அவள் இரக்கமில்லாதவன்" என்று... "பாடுங்கள் இவன் கல்லறையில்- இவன் பைத்தியக்காரன் என்று" என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா? போய் விட்டாய். அடுத்து என்ன செய்வது. பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறோர்கள்... காதலர்கள். நீயும் அதையே செய்தாய். நல்லது. ஆனால் உண்மை வேறு தானே. ஏதோ ஒன்று, என்னை விட்டு உன்னை விலகும்படி தூண்டியது என்பதை நான் அறிவேன். காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான்.காதல் கூட நாளாக, நாளாக சலித்து தான் போகிறது.ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது. பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நானாக விலகினால் எனக்கது கௌரவம். இல்லையென்றால்... ஏதேனும் சட்டச்சிக்கல்கள்... ஈவ்டீசிங் கள்... வம்பு தும்புகள். வேண்டாமே யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும். யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை உனக்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துக்கள். வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இருக்காது. நீ எனக்கு கிடைப்பது போல் இருந்தது. ஆனால் கிடைக்கவில்லை. நான் என் மனசை தேற்றிக் கொள்கிறேன். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது. மகிழ்ச்சி... நேற்று உன்னை ஷாப்பிங் மாலில் பார்த்தேன். நீயும் என்னை பார்த்தாய். படக்கென்று முகத்தை திருப்பி கொண்டாய். சேலையை இழுத்து போர்த்திக் கொண்டாய். பிறகு என் பக்கமே நீ திரும்பவில்லை என்பதை நான் அறிவேன். என்னால் உனக்கென்ன தீங்கு விளையும் என்று நினைத்தாய். நீ தான் சொன்னாய், ஒரு முறை, "சூது, வாது இல்லாம்ம இருக்கீங்க... எப்படி தான் பொழைக்க ப்போறிங்களோ தெரியல" என்று,நீ என்னை பார்த்து நட்புடன் சிரிக்க வேண்டாம். எதிரியை பார்ப்பது போல் பார்த்து இருக்க வேண்டாமே... கேவலமாய் பார்த்து இருக்க வேண்டாமே, என்ன செய்வது. கேவலம்- நாம் மனிதர்கள் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.