ஞாயிறு, 6 ஜூன், 2010

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!

உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!

நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!

நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!

உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.