ஞாயிறு, 6 ஜூன், 2010

காதல் மழை ஏந்திழை


வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம் வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே சாத்தியமாகிறது என்ன செய்ய?


குடையின் ஆதரவில் நம்மை விட்டு விட்டு அத்தனையும் நனைத்துப் போனது மழை!காதலினால் கனன்ற காமம் தீப்பிடிக்கச் சாம்பலானது நாகரீக முகமூடி!


தோட்டத்துப் பூக்கள் மழையில் குளித்தன!காய்ச்சல் வந்ததெனக்கு என் பார்வையில் அவையெல்லாம் நீயானதால்!


பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்மனதில் வந்து போகிறதுன் முகம்!சபிக்கிறேன் நான் மின்னலை சற்று நீடித்தாலென்னவென்று?


உன் இதழ்களை கவனித்தவாறே உரையாடுகிறேன் இப்போதெல்லாம்!உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது எனக்கான காதல் உதிராதாவென்று?


நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில் நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம் சொல்லாமல் சொல்லிப் போனது நம் கண(ன)ம் பொருந்திய காதலை!


ஆழியில் வசிக்கும் சிப்பியானது வானிலிருந்து மழைத்துளியொன்றை உள்வாங்கி முத்தாக்குமாம்!நீ தந்த முத்தமும் அதுபோலவே வெட்கத்தைத் தின்று நம்முள் காதலை கருவாக்கியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.